மதுரையில் ரூ. 600 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தென்மண்டல மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது: சிறு குறு நடுத்தரத் தொழில்கள் மூலமே ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பல லட்சம் குடும்பங்கள் வாழும். அந்த அடிப்படையில் இவற்றின் வளர்ச்சியை தமிழக அரசு முக்கியமாக கருதுகிறது. தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனகளின் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவை என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்த பொருட்களுக்கு வெளிநாட்டில் வரவேற்பு உள்ளது. நமது உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் அதிக அளவில் இவற்றை உற்பத்தி செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு மாநில அளவில் சிறந்த விருதுகளை நான் வழங்கியுள்ளேன்.
இந்த நிறுவனங்கள் இந்திய அளவில், உலக அளவில் சிறப்பு பெற வேண்டும். தமிழகத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் 2 கட்டங்களாக ரூ. 600 கோடி மதிப்பில் டைடல் நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சி இணைத்து டைடல் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave your comments here...