எரிபொருள் கசிவு – நாசாவின் ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் 2வது முறையாக விண்ணில் செலுத்துவது நிறுத்தம்
நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. ஆர்ட்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
கடந்த 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று இரவு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்து இருந்தது.
The #Artemis I mission to the Moon has been postponed. Teams attempted to fix an issue related to a leak in the hardware transferring fuel into the rocket, but were unsuccessful. Join NASA leaders later today for a news conference. Check for updates: https://t.co/6LVDrA1toy pic.twitter.com/LgXnjCy40u
— NASA (@NASA) September 3, 2022
இந்த நிலையில், ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்படுவதை பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டதால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டது. பொறியாளர்கள் எரிபொருள் கசிவைக் கண்டறிந்ததும், ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ஆரம்ப ஏவுதல் முயற்சி நிறுத்தப்பட்டது.
இதனால் ராக்கெட் ஏவும் முயற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. மேலும் ராக்கெட்டை ஏவுதல் தொடர்பான அப்டேட் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது . நாசா ராக்கெட்டை ஏவும் முயற்சியை ஒத்திவைத்துள்ள நிலையில், அடுத்து ராக்கெட்டை ஏவுதற்கான சாதகமான சூழல் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளாக உள்ளது. ஒருவேளை இந்த இரண்டு தினங்களிலும் ராக்கெட்டை ஏவ முடியவில்லை என்றால், நிலவின் சுற்றுப்பாதை நிலை காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி வரை காத்திருக்கும் சூழல் உருவாகும்.
Leave your comments here...