5ஜி சேவை : தீபாவளி முதல் அறிமுகம் – முகேஷ் அம்பானி அறிவிப்பு..!
வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை முதல் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்று பேசியதாவது: வரும் அக்டோபர் மாதம் 4 மெட்ரோ நகரங்களில் முதல்முறையாக 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ ரூ.2 லட்சம் கோடியை முதலீடு செய்யும். 5ஜி அல்ட்ரா அதிவேக இணைய சேவையை வழங்க ஏதுவாக, தற்போதுள்ள 4ஜி நெட்வொர்க் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பதிலாக தனியான 5ஜி கட்டமைப்பு உருவாக்கப்படும். அக்டோபர் மாதம் வரும் தீபாவளி பண்டிகையின்போது முதல்கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய 4 மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை அறிமுகமாகும். அதன் பிறகு அடுத்தகட்டமாக 2023 டிசம்பர் வரையிலான 18 மாதங்களுக்குள் இந்த சேவை நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் ரிலையன் ஸின் தொலைத் தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமனம் செய்வதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் வர்த்தக பிரிவின் தலைவர் பொறுப்பை தனது மகள் இஷாவிடம் ஒப்படைப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இது குறித்து இஷா அம்பானி கூறும்போது, “ஒவ்வொரு இந்தியரின் தினசரி தேவைகளை கண்டறிந்து அதற்கேற்ற வகையிலான தயாரிப்புகளை அதிக தரத்துடன் வழங்குவதே எங்களது முக்கிய நோக்கமாகும். இதுதவிர, இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களையும் ரிலையன்ஸ் ரீடெய்ல் சந்தைப்படுத்த தொடங்கும். விரைவில் எஃப்எம்சிஜி வர்த்தகத்திலும் ஈடுபட உள்ளோம்” என்றார்.
Leave your comments here...