சுகாதாரமும், ஆன்மீகமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை – அம்ரிதா மருத்துவமனையை திறந்து வைத்து பிரதமர் மோடி உரை.!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாதில் நவீனமான அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, முதலமைச்சர் மனோகர் லால், துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா, மத்திய அமைச்சர் கிர்ஷன் பால் குர்ஜார், மாதா அமிர்தானந்தமயி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாடு அமிர்த காலத்தில் நுழையும் நிலையில், கூட்டான விருப்பங்களும், தீர்மானங்களும் நல்வடிவம் பெறுகின்றன. மாதா அமிர்தானந்தமயியின் ஆசிகளை நாடு பெற்றிருப்பது பொருத்தமானதாக அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை நவீனம் மற்றும் ஆன்மீகத்தின் கலவையாக உள்ளது. நலிந்த பிரிவு நோயாளிகளின் சிகிச்சைக்கு எளிதாகவும், குறைந்த செலவிலும் மருத்துவ வசதி கிடைப்பதாக இது மாறும். “அம்மா என்பது அன்பு, கருணை, சேவை, தியாகம் ஆகியவற்றின் உருவகமாகும். அவர் இந்தியாவின் ஆன்மீக மரபை கொண்டு செல்பவர்” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் மருந்து மற்றும் சேவையின் மகத்தான பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர், “சிகிச்சையை சேவையாகவும், நல்வாழ்வை அறமாகவும் கருதுகின்ற நாடு இந்தியா. இங்கு சுகாதாரமும், ஆன்மீகமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. மருத்துவ அறிவியலை நாம் வேதமாக கொண்டிருக்கிறோம். நமது மருத்துவ அறிவியலுக்கு நாம் ஆயுர்வேதம் என்றும் பெயர் வைத்திருக்கிறோம்” என்றார். நூற்றாண்டு கால சிக்கலான அடிமை நிலையிலும் கூட இந்தியா தனது ஆன்மீகத்தையும், சேவை பாரம்பரியத்தையும் மறந்து விடவில்லை என்பதை அங்கு கூடியிருந்தோருக்கு அவர் நினைவுபடுத்தினார்.
பூஜ்ய அம்மா போன்ற துறவிகள் வடிவில் ஆன்மீக சக்தி நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியிருப்பது தேசத்தின் நல்வாய்ப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார். கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான பொறுப்புகளை சமயம் சார்ந்த, சமூகம் சார்ந்த நிறுவனங்களோடு தொடர்புபடுத்தும் பழங்கால மாதிரியில் அரசு மற்றும் தனியார் துறையில் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். “இது அரசு – தனியார் பங்களிப்பாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ‘பரஸ்பர முயற்சி’யாகவும் நான் காண்கிறேன்” என பிரதமர் கூறினார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி பற்றி எடுத்துரைத்த பிரதமர், ஒரு சிலரால் தவறான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் காரணமாக சமூகத்தில் பல வகையான வதந்திகள் பரவத் தொடங்கின என்றார். சமூகத்தின் சமயத் தலைவர்களும், ஆன்மீக போதனையாளர்களும் ஒன்று சேர்ந்து இத்தகைய வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டதன் பயன் உடனடியாக தெரிய வந்தது என்று அவர் மேலும் கூறினார். இதனால் மற்ற நாடுகளில் பார்த்தது போல் இந்தியா தடுப்பூசி தயக்கத்தை எதிர்கொள்ளவில்லை.
செங்கோட்டை கொத்தளத்தில் நாட்டு மக்களுக்கு தாம் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்த பிரதமர், அமிர்த காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் முன் 5 உறுதிமொழிகளை தாம் வைத்திருப்பதாகவும் அவற்றில் ஒன்று அடிமை மனோபாவத்திலிருந்து முற்றிலுமாக விடுபடுவதாகும் என்றும் கூறினார். இந்த தருணத்தில் நாட்டில் இது குறித்து ஏராளமான விவாதங்கள் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அடிமை மனோநிலையை நாம் கைவிடும்போது நமது செயல்களின் திசையும் மாறுகின்றன” என்று பிரதமர் கூறினார். இந்த மாற்றம் நாட்டில் சுகாதார கவனிப்பு முறையில் கண்கூடாக தெரிகிறது என்றும், நாட்டின் பாரம்பரிய அறிவின் மீதான நம்பிக்கை வளர்ந்து வருகிறது என்றும் அவர் தொடர்ந்து பேசுகையில் கூறினார். யோகாவிற்கு உலகளாவிய அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது என்றும், அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டினை உலகம் கொண்டாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு கிடைத்திருக்கும் ஹரியானா, நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்டு தமது உரையை பிரதமர் நிறைவுசெய்தார். பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் என்பதில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்திருக்கும் ஹரியானா மக்களை பிரதமர் பாராட்டினார். உடல் தகுதி, விளையாட்டு போன்றவை ஹரியானாவின் கலாச்சாரத்தில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அம்ரிதா மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்: கேரளாவை சேர்ந்த ஆன்மிக குரு அம்மா என்கிற அம்ரிதாநந்தமயி தேவி இதனை நிறுவியுள்ளார். 130 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை டெல்லிக்கு அருகே உள்ள பரிடாபாத்தில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை ரூ. 4000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.மருத்துவமனைக்குள் 4 நட்சத்திர ஹோட்டல், மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மறுவாழ்வு மையம், நோயாளிகளை கொண்டு செல்ல ஹெலிபேட் வசதி, நோயாளிகள் உறவினர்கள் தங்க 498 அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருத்துவமனையில் மொத்தம் 10,000 ஊழியர்களும் 800 மருத்துவர்களும் பணியாற்ற உள்ளனர். முதற்கட்டமாக 550 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன, இன்னும் 18 மாதங்களில் அதை 750 அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டில் இருந்து 2029 ஆம் ஆண்டிற்குள் 2,600 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது.
Leave your comments here...