5ஜி அலைக்கற்றை – மத்திய அரசை பாராட்டி தள்ளிய ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் .! ஏன் தெரியுமா..?
நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலமான 5ஜி சில நாட்களுக்கு முன் நடந்தது. இதுவரையிலான அலைக்கற்றை ஏலத்தில் இதில் தான் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்திற்கு அலைக்கற்றைகள் ஏலம் போயுள்ளன. இந்த தொகையை 20 வருடாந்திர தவணைகளாக டெலிகாம் ஆபரேட்டர்கள் செலுத்தலாம். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பாதி அலைக்கற்றையை எடுத்துள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.88 ஆயிரம் கோடி.
ஜியோவுக்கு அடுத்தப்படியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.43 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது. மூன்றாவது இடத்தில் வோடபோன் உள்ளது. அந்நிறுவனம் ரூ.18,786 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் வென்றது. அதானி குழுமம் இம்முறை 5ஜி ஏலத்தில் பங்கேற்று 400 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது பொதுப் பயன்பாட்டுக்கானது அல்ல. அவர்களுடைய தொழில் பயன்பாட்டுக்கானது.
தற்போது ஏலத்தில் வென்ற நிறுவனங்கள் முன்பணம் செலுத்தி வருகின்றன. இதுவரை தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.17,876 கோடியை கட்டணம் கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.7,864 கோடி செலுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் நான்கு ஆண்டுகால தவணையான ரூ.8,312 கோடி செலுத்தியுள்ளது. வோடபோன் ரூ.1,679 கோடியை செலுத்தியுள்ளது. அதானி நிறுவனம் ரூ.18.94 கோடி கட்டியுள்ளது. 5ஜி ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் 19,867 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பணம் செலுத்திய சில மணி நேரங்களில் அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம் கிடைத்ததை வியந்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏர்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ.8,312 தொகையை செலுத்தியது. பணம் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட அலைவரிசைகளுக்கான ஒதுக்கீடு கடிதத்தை தொலைத்தொடர்புத் துறை வழங்கியது. உறுதியளித்தபடி ஸ்பெக்ட்ரத்துடன் E பேண்ட் ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. பதற்றமில்லை, பாலோஅப் இல்லை, காரிடாரில் அவர்கள் பின் சுற்றி வர வேண்டியதில்லை, இது தான் சுலபத் தொழில் செய்யும் முயற்சியின் சாதனை.
தொலைத்தொடர்புத் துறையுடனான எனது 30 ஆண்டுகால நேரடி அனுபவத்தில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. தொழில் நடத்துவது இப்படி தான் இருக்க வேண்டும். தலைமையில் இருப்பவர்களும், டெலிகாம் தலைமையும் சரியாக வேலை செய்கிறார்கள். என்ன ஒரு மாற்றம். இந்த மாற்றம் தான் இந்தியாவை புரட்டிப்போட உள்ளது. இந்த மாற்றம் ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்ற கனவுகளுக்கு சக்தியளிக்க கூடியது. என புகழ்ந்துள்ளார்.
Leave your comments here...