ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதைபோல் சுட்ட போலீசார் – ஆட்சியர் , 17 போலீஸ் மீது நடவடிக்கை தேவை- அருணா ஜெகதீசன் கமிஷன்..!
தூத்துக்குடியில் செயல்பட்ட நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018-ல் பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிய கிராமங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன
இத்தொடர் போராட்டங்களி 100-வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தூத்துக்குடியில் 2018, மே 22-ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் ஈவிரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே குலைநடுங்க வைத்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி விசாரணை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆண்டு மே மாதம் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டது.பின்னர் கடந்த மே மாதம் முழுமையான அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.
அருணா ஜெகதீசன் குழு வழங்கிய:-
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை குருவிகளை சுடுவதைபோல் போலீசார் சுட்டு கொன்றுள்ளதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது. தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும் உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம், பின்னால் இருந்து சுட்டது அம்பலமாகியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொள்ளவில்லை.
தூத்துக்குடி கலவரம்: எந்த போலீசுக்கும் படுகாயமில்லை தூத்துக்குடி கலவரத்தில் எந்த ஒரு போலீஸ்காரருக்கும் படுகாயம் ஏற்படவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அப்போதைய காவல்துறை தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் அப்பட்டமான தோல்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அப்போதைய ஐஜி நடவடிக்கை எடுக்கவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புறம் இடங்களிலும் சுடலைக்கண்ணு சுட்டுள்ளார். ஒரே போலீஸ்காரர் 4 இடங்களில் சுட்டதன் மூலம் அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி. மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார் உடனிருந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கையாள்வதில் ஆட்சியர் வெங்கடேஷ் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டியுள்ளார். போராட்டத்துக்கு முதல் நாள் ஆட்சியர் வீட்டில் இருந்து கொண்டே உதவி ஆட்சியரை சமாதானக் கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைத்துள்ளார்.
தூத்துக்குடி சம்பவம் – நடவடிக்கைக்கு பரிந்துரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2018ல் தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சர்கார், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன், டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ., ஒரு தலைமை காவலர், 7 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாத போதிலும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போராட்டக்காரர்களின் கண்களில் படாமல் மறைந்து நின்று போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
தூத்துக்குடி சம்பவம் போலீசாரின் குரூரமான செயல் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். கலைந்து ஓடிய போராட்டக்காரர்கள் மீதும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்கவே துப்பாக்கிச்சூடு என்ற போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய போராட்டக்காரர்களை பூங்காவில் ஒளிந்துகொண்டு சுட்டுள்ளனர். போலீசார் தங்களின் வரம்புகளை மீறி செயல்பட்டதாகவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. தவறு செய்த போலீசார் மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை செய்துள்ளார்.
ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை:
அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ், பொறுப்புகளை தட்டிக்கழித்து அலட்சியத்துடன் கோவில்பட்டியில் இருந்துள்ளார். ஆட்சியர் வெங்கடேஷ் எவ்வித யோசனையுமின்றி முடிவுகளை எடுத்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Leave your comments here...