எடப்பாடி பழனிசாமி கவனித்த நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் – நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பணியிடை நீக்கம்!

தமிழகம்

எடப்பாடி பழனிசாமி கவனித்த நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் – நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பணியிடை நீக்கம்!

எடப்பாடி பழனிசாமி கவனித்த நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் – நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பணியிடை நீக்கம்!

எடப்பாடி பழனிசாமி கவனித்த நெடுஞ்சாலைத்துறையில் ரூ.692 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாருக்கான விசாரணை தொடங்கியுள்ள நிலையில், கண்காணிப்பு பொறியாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அறப்போர் இயக்கம் சார்பில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் சமீபத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலை துறையில் 2019, 2020 மற்றும் 2021ல் டெண்டர் போடப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் தஞ்சாவூர், சிவகங்கை நெடுஞ்சாலைகள் மற்றும் கோவை உக்கடம் பாலம் ஒப்பந்தம் போன்றவற்றில் நடந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறை, தலைமை செயலர் மற்றும் நெடுஞ்சாலை துறை செயலரிடம் புகார் கொடுத்தது.

டெண்டர் திறப்பதற்கு முன்பே யாருக்கு டெண்டர்கள் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் அப்போதைய நெடுஞ்சாலை துறை செயலருக்கு புகார் அனுப்பியும் அதை மீறி டெண்டர்கள் அவர்களுக்கு வழங்கிய ஆதாரம், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்ததன் ஆதாரம், எஸ்டிமேட் அதிகப்படுத்தப்பட்டு இதனால் ரூ..692 கோடி இழப்பு ஏற்படுத்தியதன் ஆதாரம் என அனைத்தும் புகாருடன் கொடுக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை கோரப்பட்டது.

முக்கியமாக இந்த நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் வெற்றி பெற்ற கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், பிஎஸ்கே அன்கோ மற்றும் அவர்களை சார்ந்த நிறுவனங்களை தற்பொழுது வருமான வரித்துறை சோதனை செய்து 500 கோடிக்கு போலி செலவினங்கள் காண்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இவையும் விசாரிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்கும் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திருச்சி மண்டலம் தஞ்சாவூருக்கு பொறுப்பாக இருந்த கண்காணிப்பு பொறியாளர் பழனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது, நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தினர் கூறுகையில், ‘நெடுஞ்சாலை துறையில் நடந்த ரூ.692 கோடி குறித்த அறப்போர் இயக்க ஊழல் புகார் மீது முதல் நடவடிக்கையாக திருச்சி மண்டலம் தஞ்சாவூருக்கு பொறுப்பாக இருந்த கண்காணிப்பு பொறியாளர் பழனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது. அடுத்தகட்டமாக மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதும் அத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு இதில் என்ன என்பதை விசாரிப்பதும் மிக அவசியம்’ என்றனர்.

Leave your comments here...