தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது : யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? – முழு விவரம்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார். பயன்படுத்து யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-
1. தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசைமின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
2. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
3. வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர்.
4. தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
5. இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
6. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
7. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
8. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.36 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
9. இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
10. இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 மட்டும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
11. இரு மாதங்களுக்கு மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
12. இரு மாதங்களுக்கு மொத்தம் 900 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.565 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
13. தற்பொழுது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மின் நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10 % அதிகரித்து மொத்தம் ரூ.1.786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.
500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட்கூடுதலாக பயன்படுத்தினாலும் மின்நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Leave your comments here...