குடியரசுத் தலைவர் தேர்தல் : 99 சதவீத வாக்குகள் பதிவு – ஜூலை 21ல் ரிசல்ட்..!
நாட்டின் 16-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்குச் சீட்டு முறையில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.
எம்.பிக்கள் வாக்களிப்பதற்காக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில சட்டமன்றத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்து வாக்குப்பதிவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், பிரஹலாத் ஜோஷி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதேபோன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக-வின் ஹேமா மாலினி உள்ளிட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சட்டசபை குழு கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நேரடியாக அவர் தலைமை செயலகத்திற்கு வந்து வாக்களித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.அதிமுக இடைக்கால பொதுசெயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். மாலை 4 மணிக்கு மேல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாசர், ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் பிபிடி கிட் அணிந்து வந்து வாக்களித்தனர்
இதேபோல, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கவச உடை அணிந்துவந்து வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 771 பேரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,025 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.
இதில், ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 சட்டப்பேரவைகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் விமானம் மூலம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தல் பார்வையாளரான சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் வாக்குப்பெட்டிக்கு சீல்வைக்கப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் விமானம் நிலையம் கொண்டுசெல்லப்பட்டது. விமானத்தில் அதிகாரிகள் இருக்கைக்கு அருகிலேயே வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...