மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் 96 போர் விமானங்கள் தயாரிக்க விமானப்படை திட்டம்..!
ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 96 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன. அந்த விமானங்களை இந்திய விமானப் படை வாங்கவுள்ளது.
இந்திய விமானப்படை 114 போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது, அவற்றில் 96 இந்தியாவில் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலகளவில் வாங்கி, இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை 114 பன்முனை பயன்பாட்டு போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு விற்பனையாளருடன் கூட்டு சேர அனுமதிக்கப்படும்.
சமீபத்தில் இந்திய விமானப்படை வெளிநாட்டு விற்பனையாளர்களுடன் சந்திப்பு நடத்தியது. அவர்களுடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி அதில் ஆலோசிக்கப்பட்டது. போயிங், லாக்ஹீட் மார்ட்டின், சாப், மிக், இர்குட் கார்ப்பரேஷன் மற்றும் டசால்ட் ஏவியேஷன் உள்ளிட்ட உலகளாவிய விமான உற்பத்தியாளர்கள் இந்த டெண்டரில் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, முதலில் 18 விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, அடுத்த 36 விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொகை, பகுதியளவு வெளிநாட்டு நாணயத்திலும் மீதி தொகை இந்திய நாணயத்திலும் என இருவகையாக பிரித்து பணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 114 விமானங்களில், மீதி 60 விமானங்கள் தயாரிப்பு என்பது இந்திய நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும். அரசாங்கம் இதற்கான தொகையை இந்திய நாணயத்தில் மட்டுமே செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாணயத்தில் பணம் செலுத்தப்படுவதால், இந்த திட்டத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ‘மேக்-இன்-இந்தியா’ உள்ளடக்கத்தை அடைய விற்பனையாளர்களுக்கு இது உதவும். போர் விமானங்களுக்கான செலவு குறைந்த ஒரு தீர்வை, இந்திய விமானப்படை தேடுகிறது. விமானப்படையானது, குறைந்த செலவில் அதிக திறனை கொண்ட ஒரு விமானத்தை விரும்புகிறது. சீன எல்லையில், 2020 இல் தொடங்கிய லடாக் நெருக்கடியின் போது, அவசரகால உத்தரவின் கீழ் வாங்கப்பட்ட 36 ரபேல் போர் விமானங்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தது. ரபேல் போர் விமானங்களின் செயல்பாடு குறித்து இந்திய விமானப்படை மிகவும் திருப்தி அடைந்துள்ளது. மேலும், விமானப்படையின் எதிர்கால விமானங்களிலும் இதே போன்ற திறனை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...