இந்திய ரூபாய் நோட்டில் இரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படம்.. ஆர்பிஐ – நிதியமைச்சகம் திட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் தாள்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களிலும் மகாத்மா காந்தி அவர்களின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகியவை மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாத்மா காந்தி-க்கு அடுத்தப்படியாக வங்காளத்தின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர் எனப் பல அடையாளங்களைக் கொண்டு இருக்கும் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரை மத்திய அரசு ரூபாய் நோட்டில் அச்சிட பரிசீலித்து வருகிறது.
ஐஐடி-டெல்லி பேராசிரிரான திலீப் டி ஷஹானி இந்திய ரூபாய் நோட்டுகளில் வாட்டர்மார்க்ஸைத் தேர்ந்தெடுத்து, இறுதி ஒப்புதலுக்காக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பவர் ஆவார். இதனால் மகாத்மா காந்தியின் படத்தோடு சேர்த்து ரவீந்திரநாத் தாகூர் , அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க டாலர் நோட்டில் ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் உட்படச் சில 19 ஆம் நூற்றாண்டின் ஜனாதிபதிகள் உருவப்படங்களைக் கொண்டுள்ளன. இதேபோல் இந்தியாவிலும் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது.
Leave your comments here...