TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தமிழ் எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு – தமிழக அரசு அறிவிப்பு.!
TNPSC உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் TNPSC, TRB, TNUSRB உள்ளிட்ட போட்டித் தேர்வு முகமைகள் ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி அரசுப்பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேரும் பிற மாநிலத்தவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பணிகளில் சேர்வதற்கு தமிழ் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த் தாள் தேர்வு இடம்பெறும் என்று அரசு அறிவித்து, அந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கும் வந்துள்ளது. தற்போது அதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களின் பெற்றோர் சஙக்த்தின் மனுவில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்க சிரமப்படுவார்கள் என்றும் இம்மாணவ மாணவியர்கள் சிலர் முன்பருவபள்ளி முதல் பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக் கல்வியில் மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள் என தெரிவித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வில் இருந்து இவர்களுக்கு விலக்குகோரி அவர்களுக்கு தனியாக பொது ஆங்கில தாளினை நடத்த கோரியுள்ளனர்.
இதனை ஏற்று, உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக்குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சு & மொழித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடுகள், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுகள், பன்முகக் குறைபாடுகள் என்று 8 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், 40 சதவிகிதத்துக்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...