குஜராத் துறைமுகம் : நூதன முறையில் கடத்திய ரூ.450 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்.!
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் பிபவாவ் துறைமுகத்தில் ஈரான் நாட்டில் இருந்து கண்டெய்னர் ஒன்று வந்துள்ளது. அதில், சந்தேகத்தின் அடிப்படையில் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் வருவாய் உளவு இயக்குனரகத்தின் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அதிகாரிகளை ஏமாற்றும் வகையில், நூதன முறையில் போதை பொருள் கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதன்படி, ஹெராயின் என்ற போதை பொருள் அடங்கிய திரவத்தில் பஞ்சு நூல்களை மூழ்க வைத்து உள்ளனர். இதன்பின்னர் அதனை காய வைத்து, பெரிய மூட்டைகளாக கட்டி உள்ளனர். அதனை பைககளில் அடைத்து ஏற்றுமதிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
இதனை குஜராத் டி.ஜி.பி. ஆஷிஷ் பாட்டியா உறுதிப்படுத்தி உள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பே இந்த பொருட்கள் துறைமுகத்திற்கு வந்திறங்கி உள்ளன. சந்தேகத்திற்குரிய வகையிலான 4 பைகளை சோதனை செய்து, 395 கிலோ எடை கொண்ட நூல்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஹெராயின் அந்த நூல்களில் இருந்தது கண்டறியப்பட்டது. இதன்படி 90 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை பொருள் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த நூல்கள், மற்ற பைகளில் வழக்கம்போல் அனுப்பி வைக்கப்பட்ட நூல்களுடன் சேர்த்து அனுப்பப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்புவதற்காக இந்த முறையை கையாண்டுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.450 கோடி என பாட்டியா கூறியுள்ளார்.நூல்களில் உள்ள ஹெராயினை பிரித்து எடுக்கும் பணிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக நடைபெறும் என்று வருவாய் உளவு இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
Leave your comments here...