சென்னையில் 2வது விமான நிலையம் – இறுதி செய்கிறது மத்திய அரசு..!
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழக அரசு பரிந்துரைத்த நான்கு இடங்களில், பரந்துார், பன்னுார் என இரு இடங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. பரந்துாரில் விமான நிலையம் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
டில்லி, மும்பை நகரங்களை ஒப்பிடுகையில், சென்னை விமான நிலையம் போதுமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதனால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 2004ல் நிலம் தேர்வு மற்றும் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு துவக்கியது.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக, இதற்கான அரசாணைகள் திருத்தப்பட்டு, புதிய விமான நிலையம் அமைப்பதே நிரந்தர தீர்வு என்ற நிலை உருவானது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே புதிய விமான நிலையத்துக்கான நிலங்களை தேர்வு செய்யும் பணி, 2008ல் துவங்கியது. விமானங்கள் வந்து செல்வதில் தடை எதுவும் இருக்காது என்ற அடிப்படையில், இதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஆனால், இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆர்வமின்மை, அழுத்தமின்மை காரணமாக, தமிழக அரசு இதற்கான பணிகளில் தீவிரம் காட்டவில்லை. பின், புதிய விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு நான்கு இடங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பன்னுார் அல்லது பரந்துார் ஒட்டிய கிராமங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், மதுராந்தகம் அருகே படாளம் போன்ற இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புதிய விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்தி தர தயார் என, தமிழக அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழுவிடம், சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தது. இங்கு, விமானங்கள் வந்து செல்வதில் பிரச்னை ஏற்படுமா என்பதற்கான சோதனைகளை மேற்கொள்ளவும், தமிழக அரசு வலியுறுத்தியது.
ஆனால், திருப்போரூர் வேண்டாம் என, இந்திய விமான நிலையங்கள் ஆணைய குழுவின் டில்லி அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். தாம்பரம் விமான படை நிலையத்தின் வான்வெளி எல்லை, கல்பாக்கம் அனுமின் நிலையம் இருப்பது போன்றவை இதற்கு காரணமாக கூறப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே செய்யூர், படாளம் பகுதிகளில், 7,000 ஏக்கர் வரையிலான நிலத்தை கையகப்படுத்தி, தர தமிழக அரசு முடிவு செய்தது. இங்கு, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் ரயில் பாதைக்கு இடைப்பட்ட பகுதியில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. இங்கு பெரும்பாலான நிலங்கள் தனியார் பட்டா நிலங்களாகவும், சில பகுதிகள் வனத்துறை நிலங்களாக இருப்பதால், கையகப்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இப்பகுதி சென்னையில் இருந்து வெகு தொலைவில் உள்ளதாலும், வேறு சில தொழில்நுட்ப காரணங்களாலும், இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
அதேநேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார் சத்திரம் அருகே, பன்னுார், பரந்துார் பகுதிகளில், புதிய விமான நிலையத்துக்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமான, ‘டிட்கோ’ இதற்கான பூர்வாங்க பணிகளை முடித்துள்ளது.
பரந்துார், வளத்துார், ஏகனாபுரம், அக்கம்மாபுரம், தண்டலம், மடபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 7 கி.மீ., நீளம், 4 கி.மீ., அகலத்தில், 7,000 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பன்னுார் அல்லது பரந்துாரை ஒட்டிய பகுதிகளில், புதிய விமான நிலையம் செயல்பட சாதகமான சூழல் இருப்பதாக, இந்திய விமான நிலையங்கள் ஆணைக் குழுவின் முதல்கட்ட ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.
இது குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசியதாவது: சென்னையில், இரண்டாவது விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு பரிந்துரைத்த நான்கு இடங்களில், இரண்டு இடங்கள் இறுதி கட்ட பரிசீலனையில் உள்ளன. இந்த இடங்கள் எவை என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் துவக்குவோம். இதனால், புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான திட்டம் விரைவில் உயிர் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதன்படி, மத்திய அரசின் இறுதி கட்ட பரிசீலனையில் பரந்துார் மற்றும் பன்னுார் இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், பரந்துார் பகுதியில் பெரிய அளவிலான கட்டுமானங்கள் இல்லை; குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே மக்கள் வசிப்பிடங்களாக உள்ளன. காலியான இடங்கள் மிக அதிகம். எனவே, பரந்துார் பகுதியில் புதிய விமான நிலையம் அமைய, அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, இந்திய விமான நிலைய ஆணைக்குழு மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave your comments here...