தேச பாதுகாப்புக்காக 320 செல்போன் செயலிகள் முடக்கம்..!! – மத்திய அரசு
நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன் சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரது நினைவுநாளையொட்டி அவர்களுக்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
பகத்சிங் உள்ளிட்டோரின் தியாகம், எப்போதும் நினைவுகூரப்படும் என்றும், இனிவரும் தலைமுறையினருக்கு அவர்களது தியாகம் உந்துசக்தியாக திகழும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதில் 11 பேர் பலியான சம்பவத்தை அம்மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் மக்களவையில் எழுப்பினர். பதாகைகளை ஏந்தியபடி, மேற்கு வங்காள அரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பங்களுக்கிடையிலான தகராறில் அச்சம்பவம் நடந்ததாகவும், 20 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் பட்டீல் தன்வே கூறியதாவது:-
கொங்கன் ரெயில்வே, ஒரு கார்ப்பரேஷனாக இயங்கி வருகிறது. அதற்கு மத்திய அரசு உதவி வருகிறது. கொங்கன் ரெயில்வேயை இந்திய ரெயில்வேயுடன் இணைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அவர் கூறினார்.
மக்களவையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறை மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- கொரோனாவுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சத்து 15 ஆயிரம் பேர் விமான பயணம் செய்தனர். ஒமிக்ரான் பரவலின்போது, இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரமாக குறைந்தது.கடந்த 7 நாட்களாக தினசரி பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்து 82 ஆயிரமாக உயர்ந்தது. இதனால், விமான போக்குவரத்து துறை மீண்டெழும் என்று நம்புகிறோம்.2023-2024 நிதிஆண்டில் மொத்த விமான பயணிகள் எண்ணிக்கையை 40 கோடியாக உயர்த்துவதுதான் எங்கள் இலக்கு என்று அவர் கூறினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சோம் பிரகாஷ் கூறியதாவது:-
தேச பாதுகாப்புக்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் இதுவரை 320 செல்போன் செயலிகளை மத்திய அரசு முடக்கி இருக்கிறது. 21 மத்திய அமைச்சகங்களின் 146 வகையான அங்கீகாரங்களை பெற, ஒற்றை சாளர முறையில் விண்ணப்பிக்கும் வசதி அமலுக்கு வந்துள்ளது என்று அவர் கூறினார்.
Leave your comments here...