ஹிஜாப் விவகாரம் : நீதிபதிகளுக்கு மிரட்டல் – தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : கர்நாடகா அரசு அறிவிப்பு..!

இந்தியா

ஹிஜாப் விவகாரம் : நீதிபதிகளுக்கு மிரட்டல் – தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : கர்நாடகா அரசு அறிவிப்பு..!

ஹிஜாப் விவகாரம் :  நீதிபதிகளுக்கு மிரட்டல் – தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : கர்நாடகா அரசு அறிவிப்பு..!

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை கோரிப்பாளையத்தில் கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதற்கு உதாரணமாக ஜார்க்கண்ட்டில் நடைபயிற்சி சென்ற நீதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அந்த நபர் குறிப்பிட்டு பேசியதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து ரஹமத்துல்லா, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், ரஹமத்துல்லா நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று, ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தஞ்சை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த புகாரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி ஜமால் உஸ்மாணி கைது செய்யப்பட்டார்.

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும், தேசவிரோத சக்திகள் வளராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Leave your comments here...