நொய்டாவுக்கு சென்றால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது – தவறான எண்ணத்தை உடைத்த சாதனை படைத்த யோகி
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மீண்டும் ஆட்சியை பிடிப்பதோடு, யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார். இவர் கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக ஆகியுள்ளார்.
டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவுக்கு செல்லும் முதல்வர், மீண்டும் அப்பதவிக்கு வர முடியாது என்ற ஒரு எண்ணம் உலவுகிறது. ஆனால், யோகி ஆதித்யநாத் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் நொய்டாவுக்கு 10 தடவை சென்றுள்ளார். இருப்பினும், தொடர்ந்து 2-வது தடவையாக அவர் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம், நொய்டா பற்றிய தவறான எண்ணத்தை உடைத்துள்ளார். நொய்டா சென்றால் அரசியல் தலைவர்கள் தோற்பார்கள் என்ற தவறான எண்ணத்தை நரேந்திர மோடியும், யோகி ஆதித்யநாத்தும் பொய்யாக்கி உள்ளனர். அதாவது 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியும், 2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத்தும் வெற்றி பெற்று மூடநம்பிக்கைக்கு முடிவு கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜனதா சார்பில் கல்யாண்சிங், ராஜ்நாத்சிங் ஆகியோர் இதற்கு முன்பு முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து 2-வது தடவையாக முதல்வராக இருந்தது இல்லை. ஆனால், இதிலும் யோகி ஆதித்யநாத் மாறுபடுகிறார். 2-வது தடவையாக பதவிக்கு வரும் ஒரே பா.ஜனதா முதல்-மந்திரி ஆகிறார். தனி பெரும்பான்மையுடன் வென்ற பா.ஜனதா முதல்வரும் அவரே ஆவார்.
இந்தியாவில் அதிக சட்டசபை தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலத்துக்கு முதன் முதலாக 1952 மே 20ல் சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 70 ஆண்டில் 21 முதல்வர்களை உத்தர பிரதேசம் கண்டுள்ளது. இதில் முதல்வராக செயல்பட்டவர்களில் 5 ஆண்டு பதவியை முழுவதுமாக பூர்த்தி செய்து அடுத்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் இல்லை. இதை யோகி ஆதித்யநாத் தகர்த்து சாதனை படைத்துள்ளார்.
Leave your comments here...