மணல் கடத்தலில் கைதான கேரள கத்தோலிக்க பிஷப், பாதிரியாரை வி.ஐ.பி.,க்கள் சந்திப்பதால் சர்ச்சை!
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில், 2019ல் கேரள மாநிலம், பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலத்தில், கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ், ‘எம் சாண்ட்’ ஆலை நடத்தினார். அங்கு, செயற்கை மணல் தயாரிக்காமல், ஆற்றுப்படுகை மணலை கடத்தினார். மொத்தம் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டதாக, சப் – கலெக்டர் பிரதீக் தயாள் ஆய்வு செய்து, 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.
இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில், கோடிகளில் பணம் சம்பாதித்த வி.ஐ.பி.,க்கள், உயர் அதிகாரிகள் தப்பி விட்டனர். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் கோலோச்சிய பிரமுகர்கள், இந்த வழக்கில் சிக்க உள்ளனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி, போலீசார், மணல் கடத்தலில் பயனடைந்த கேரளாவைச் சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் 69, மற்றும் ஐந்து கத்தோலிக்க பாதிரியார்களை கைது செய்து, நாங்குநேரி சிறையில் அடைத்தனர். இவர்களில், பிஷப் சாமுவேல் மார் இரோனஸ், பாதிரியார் ஜோஸ் ஜாம காலா ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிஷப் மற்றும் பாதிரியாரை சந்திக்க, தினமும் வி.ஐ.பி.,க்கள் வரிசைகட்டி வந்தபடி உள்ளனர். நேற்று முன்தினம், நாங்குநேரி காங்., – எம்.எல்.ஏ., ரூபி மனோகரன், கத்தோலிக்க சபை கன்னியாஸ்திரிகள், அவர்களை சந்தித்தனர்.நேற்றும், நீதிமன்றம், போலீஸ் அனுமதியின்றி, அரசு மருத்துவமனையில் அவர்களை வி.ஐ.பி.,க்கள் பலர் சந்தித்து பேசினர். இது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகளில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.
Leave your comments here...