இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்தாலும் ஆபத்து நீடிக்கிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்தியாவின் சில நகரங்கள், மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கினாலும், ஆபத்து நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது: பெரும்பாலான நாடுகளில் தொற்று பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது. எந்த நாட்டில் தற்போது குறைந்து வருகிறது என்பது இல்லாமல், அனைத்து நாடுகளும் இன்னமும் அபாய கட்டத்தை கடக்கவில்லை. எனவே, சில நகரங்கள், மாநிலங்களில் தொற்று குறையத் தொடங்கினாலும், ஆபத்து இன்னும் நீடிக்கிறது. கொரோனா தொற்றினால் பாதித்துள்ள நாடுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். பரவலைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்பட சூழ்நிலைக்கேற்ற பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா தொற்று பரவலின் மத்தியில் இருப்பதால், வைரஸ் பரவலைக் குறைத்து உயிர்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். தொற்று முடிவுக்கு வந்தால், வைரஸ் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று கிடையாது.
டெல்டாவுடன் ஒப்பிடும்போது, நுரையீரலை விட, சுவாசக் குழாயின் மேல்பகுதி திசுக்களை ஒமிக்ரான் வேகமாகப் பாதிக்கக்கூடியது. இதுவே இந்த உருமாறிய வைரஸ் பரவலுக்கு உதவக்கூடும். ஒமிக்ரானுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் அதிகரித்து வருகிறது. எனவே ஆபத்தில் உள்ள நாடுகள், அனைத்து மக்களும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave your comments here...