மண் வள பாதுகாப்பை வலியுறுத்தி 1,600 கி.மீ சைக்கிள் பேரணி – ஈஷா தன்னார்வலர்கள் வரவேற்பு
அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மஹாராஷ்ட்ராவில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி இன்று (டிசம்பர்31) மதுரை வந்தடைந்தது. அவர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த பயணத்தின் நோக்கம் குறித்து அக்குழுவினர் கூறுகையில், “நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொது நலனை மையப்படுத்தி நீண்ட தூர விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த முறை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் தொடங்க உள்ள ‘கான்சியஸ் பிளானட்’ இயக்கத்திற்கு ஆதரவாக பயணம் மேற்கொண்டுள்ளோம்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக செயல் செய்து வரும் சத்குரு, இவ்வியக்கத்தின் மூலம் மண் வள பாதுகாப்பு குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார். மண்ணில் குறைந்தப்பட்சம் 3 சதவீதம் கரிம பொருட்கள் இருந்தால் தான் அதை மண் என குறிப்பிட முடியும் என ஐ.நா அமைப்பு கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் சுமார் 42 சதவீதம் விவசாய நிலங்களில் கரிமப் பொருட்களின் அளவு 0.5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 50 ஆண்டுகளில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், மண்ணில் போதிய சத்துக்கள் இருந்தால் தான் அதில் விளையும் உணவுப் பொருட்களில் சத்து இருக்கும். சத்தான உணவை உண்டால் தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆகவே, சுற்றுச்சூழலையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க மண் வளமாக இருப்பது மிகவும் அவசியம். அதிகப்படியான மரங்கள் வளர்ப்பது மற்றும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதன் மூலம் நம் மண் வளத்தை மீட்டெடுக்க முடியும்” என்றனர்.
25 தன்னார்வலர்களுடன் கூடிய இக்குழுவினர் மஹாராஷ்ட்ரா மாநிலம் உத்கிர் நகரில் இருந்து டிசம்பர் 19-ம் தேதி தங்கள் பயணத்தை தொடங்கினர். அங்கிருந்து கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக 4 மாநிலங்களை கடந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். காஞ்சிபுரம், விழுப்புரம், கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய ஊர்கள் வழியாக அவர்கள் இன்று மதுரை வந்தனர். பின்னர், இங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலி வழியாக ஜனவரி 2-ம் தேதி கன்னியாகுமரிக்கு சென்று தங்கள் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
இக்குழுவினர் கடந்த ஆண்டுகளில், நதிகளை மீட்போம் இயக்கம், ஈஷா வித்யா பள்ளி, காவேரி கூக்குரல் இயக்கம் ஆகியவற்றிற்கு ஆதரவாக சைக்கிள் பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
Leave your comments here...