மகரவிளக்கு பூஜை – சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு..!

ஆன்மிகம்

மகரவிளக்கு பூஜை – சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு..!

மகரவிளக்கு பூஜை –   சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு..!

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடந்தது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். அன்றைய தினம் மற்ற விசேஷ பூஜைகள் நடைபெறாது. பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.

பிரசித்திப்பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மகரவிளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக 12-ந்தேதி புறப்படும்.

முன்னதாக அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்த குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி அடுத்த மாதம் 11-ந்தேதி நடைபெறும். 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை படி பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. 31-ந்தேதி முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 35 கி.மீ. தூரமுள்ள இந்த பாதையில் 25 கி.மீ. தூரம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் பலத்த கட்டுப்பாடுகளுடன் மட்டுமே அய்யப்ப பக்தர்கள் எருமேலி பெருவழி பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் எருமேலி கோழிக்கடவில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் தரிசனத்திற்கு வரும் போது கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்.

மண்டல பூஜை காலத்தில் கடந்த 41 நாட்களில் 11 லட்சம் அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ரூ.85 கோடி நடை வருமானம் கிடைத்து உள்ளது. மகர விளக்கையொட்டி கூடுதல் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு சன்னிதானத்தில் கூடுதல் அப்பம், அரவணை விற்பனை கவுண்ட்டர்கள் தொடங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...