அதிநவீன பாதுகாப்பு வசதிகள் : பிரதமர் மோடியின் புதிய கார்…!
பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள ‘மெர்டிசிடிஸ் மேபேக் எஸ்650 கார்டு’ காரை, ஒரு ‘நகரும் பாதுகாப்பு கோட்டை’ என்றே கூறலாம்.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உயர் பாதுகாப்பு எடிசன், குண்டு துளைக்காத மகிந்திரா ஸ்கார்ப்பியோ ஆகிய கார்களை பயன்படுத்தி வந்தார். பிரதமரான பிறகு, ரேஞ்ச் ரோவர் வோக், டொயோட்டா லாண்ட் குரூசர் ஆகியவை மோடியின் அதிகாரப்பூர்வ வாகனங்களாக இருந்தன.
இந்நிலையில், மோடியின் காரை மேம்படுத்துவதற்கு அவரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) முடிவெடுத்தது. அதன்படி, மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார்டு கார் வாங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.12 கோடி ஆகும். சமீபத்தில் இந்தியா வந்த ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை வரவேற்க டெல்லி ஐதராபாத் இல்லத்துக்கு மோடி இந்த காரில்தான் சென்றார். அப்போது இரு தலைவர்களுக்கு அடுத்தபடியாக பலரின் கண்கள் புதிய காரைத்தான் மொய்த்தன. அதற்கு தகுதி இல்லாமல் இல்லை. சொகுசில் உச்சம், பாதுகாப்பில் எதையும் விட்டுவைக்கவில்லை மிச்சம் என்பதே புதிய மெர்சிடிஸ் மேபேக் காரின் சிறப்பம்சம்.
இதை நோக்கி ஏ.கே.47 துப்பாக்கியால் தோட்டா மழை பொழிந்தாலும், குண்டு வெடிப்பே நிகழ்ந்தாலும் உள்ளிருப்பவருக்கு சிறு பாதிப்பும் ஏற்படாது. இதன் பாலிகார்பனேட் ஜன்னல்கள் துப்பாக்கிக் குண்டுகள் ஊடுருவ அனுமதிக்காது. வெடிபொருள் எதிர்ப்பு பொருளை கொண்டிருப்பதால், வெறும் 2 மீட்டர் இடைவெளியில் 15 கிலோ குண்டு வெடித்தாலும் கார் அலுங்காது.
இந்த காரின் எரிபொருள் டேங்குக்கு ஒரு சிறப்பு மூலப்பொருளால் ‘கோட்டிங்’ கொடுக்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும், டாங்குகளை தகர்க்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் எரிபொருள் டேங்கில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இது. இரட்டை டர்போ வி12 என்ஜின் கொண்ட இந்த மெர்சிடிஸ் மேபேக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ ஆகும். இந்த காரின் டயர்கள்கூட விசேஷமானவைதான். கார் தாக்கப்பட்டால்கூட தடங்கலின்றி அதுபாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கும்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு இந்த மெர்சிடிஸ் மேபேக் கார்தான் அதிகபட்ச பாதுகாப்பு வசதி கொண்ட வி.வி.ஐ.பி. கார் என்கிறார்கள்.இந்த காரின் அச்சு அசலாக இன்னொரு காரும் (அதன் விலையும் ரூ.12 கோடி) வாங்கப்பட்டுள்ளது. அது மோடி பயணிக்கும் கார் போல ‘போலி’யாக பயன்படுத்தப்படும் என்கின்றன பிரதமரின் பாதுகாப்பு வட்டாரங்கள். பொதுவாக முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் கார்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்புகளை தாங்குகிற அளவு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துகிறார்கள். குண்டு துளைக்காத கண்ணாடிகள், பல அடுக்கு கவசத்தகடுகள்… இப்படி. ஆனால் இவை பார்ப்பதற்கு சாதாரண கார்கள் போலவே தோற்றமளிக்கும். எந்த வித்தியாசமும் தெரியாது.
Leave your comments here...