கேரளாவில் பதற்றம் : பாஜக மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை..!
கேரளாவின் ஆலப்புழாவில், எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட அடுத்த 12 மணி நேரத்திற்குள் பாஜக நிர்வாகியும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பதற்றத்தை தணிப்பதற்காக ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலர் கேஎஸ் ஷான் நேற்று(டிச.,18) மாலை டூவிலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது மோதினர். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஷானை, அவர்கள் கடுமையாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர், கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த 12 மணி நேரத்திற்குள், பாஜகவின் ஓ.பி.சி., பிரிவு செயலாளர் ரஞ்சித் சீனிவாசன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், இதுபோன்ற கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற வன்முறை சம்பவங்கள் மாநிலத்திற்கு ஆபத்தானது. இதுபோன்ற கொலைக்கார கும்பலையும், அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Leave your comments here...