காவல்துறை தாக்கி கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழக்கவில்லை : விஷமருந்தியே உயிரிழந்தது – பிரேதப் பரிசோதனையில் உறுதியானது.!
ராமநாதபுரம் அருகே மரணமடைந்த கல்லூரி மாணவன் விஷம் அருந்தியே இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தாக்கி மாணவர் இறக்கவில்லை என தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் அளித்த பேட்டி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மணிகண்டன். இவர் கடந்த 4ம் தேதி மற்றொரு நபருடன் கீழத்தூவல் அருகே டூவீலரில் சென்றுள்ளார்.
அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மறித்தும் இவர்கள் நிற்கவில்லை. இதனால் போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். அப்போது, பின்னால் உட்கார்ந்து சென்ற நபர் தப்பி ஓடி விட்டார். போலீசார் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவர, குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் அவரது தாயாரும், மற்றொருவரும் வந்து, எழுதி கொடுத்துவிட்டு மணிகண்டனை அழைத்துச் சென்றனர்.
மாணவரிடம் நடந்த விசாரணை, தாயார் மற்றும் உறவினர் வந்தது, அவர்கள் எழுதி கொடுத்துவிட்டு மகனை கூட்டிச் சென்றது உள்ளிட்ட சம்பவங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அன்று நள்ளிரவு மாணவர் இறந்து விட்டார். மறுநாள் காலை இவரது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன், காவல் நிலையத்தில் வந்து போலீசார் தாக்கியதால்தான் மணிகண்டன் இறந்தார் என புகார் கொடுத்தார். போலீசார் மீது புகார் என்பதால், பரமக்குடி ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து, மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர் தரப்பில் ஒருவர் பார்வையாளராக இருந்தார். இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் இந்த பிரேத பரிசோதனையில் திருப்தியில்லை எனக்கூறி, மீண்டும் பரிசோதனை செய்ய மாணவர் தரப்பினர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தடய அறிவியல் நிபுணர்கள் குழுவினர் 2வது முறையாக மாணவரின் உடலை பரிசோதனை செய்தனர்.
அப்போது, மாணவரின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர் விஷம் அருந்திதான் இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் தாக்கியதால் மாணவர் இறக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இருந்தாலும் மாணவர் விஷம் குடித்தது ஏன், அவருடன் டூவிலரில் சென்று தலைமறைவான நபர் யார், இந்த டூவீலர் திருடப்பட்டது என்று தெரிய வந்த நிலையில், இதில் மணிகண்டனுக்கு தொடர்பு உள்ளதா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து, டிஎஸ்பி மற்றும் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, தென்மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன். ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave your comments here...