கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் போலி சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பொது சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிலர் தங்கள் ஆதார் எண்களை நண்பர்கள் அல்லது தெரிந்த களப்பணியாளர்களிடம் கொடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டதாக முறைகேடாக சான்றிதழ்களை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட இணை இயக்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி களப்பணியாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள், புரோக்கர்கள் அல்லது ஏஜெண்ட்களை அணுகுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திய பிறகே அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமலே சான்றிதழ் வழங்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிலர் எந்த ஏஜெண்டையும் அணுகாத பலருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தாமலேயே தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே சான்றிதழ் கிடைத்த நபர்கள் எப்படி தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது என்பது குறித்த விளக்கத்தை பொது சுகாதாரத்துறை அளிக்கவில்லை.
Leave your comments here...