நாகலாந்தில் பதற்றம் : பயங்கரவாதிகள் என பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி..!

இந்தியா

நாகலாந்தில் பதற்றம் : பயங்கரவாதிகள் என பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி..!

நாகலாந்தில் பதற்றம் : பயங்கரவாதிகள் என பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி..!

நாகலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்துவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மியான்மர் எல்லைப் பகுதியில் நாகலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதன் எல்லை வழியாக மியான்மரை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி, தாக்க முயலும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் இந்த மாவட்டத்தின் ஒடிங் மற்றும் திரு என்ற கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று மாலை வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது., பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர் தவறுதலாக பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவம், நாகலாந்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் பாதுகாப்பு படையினர் வாகனங்களை, பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தியதாக நாகலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது- நாகலாந்தின், மோன் மாவட்டத்தின், திரு என்ற பகுதியில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் எங்களுக்கு தகவல் அளித்தன. இதன்பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வருத்தம் அளிக்கும் வகையில் துரதிருஷ்டவசமாக இதில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தை கேள்வி பட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுதொடர்பாக நாகலாந்து முதலமைச்சர் ரியோ தனது ட்விட்டர் பதிவில், ”பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த விவகாரத்தில் சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி கிடைக்கும். மாநில மக்கள் அமைதியை நிலைநாட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்

Leave your comments here...