மதுரை மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, ஆய்வு.!
மதுரை மாநகராட்சியில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கலாச்சார மைய கட்டுமான பணிகள், மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்க நடைபெற்று வரும் இறுதி கட்ட பணியினையும், மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.174.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1295.76 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையிலிருந்து மதுரை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்கீழ், திடீர் நகர் மேலவாசல் பகுதியில் 30 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், மண்டலம் எண்.1 தத்தனேரி பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம், மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளான கூடல்நகர் பொதிகை நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூட்ட அரங்கில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குதல், சாலைகள் அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநகராட்;சி பகுதிகளில் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை முறையாக அகற்றுதல், மாநகராட்சி பள்ளிகளின் கற்பித்தல், சிறப்பு பயிற்சிகள், மற்றும் கட்டிடங்கள் மேம்பாடு, வரி வசூல் பணிகள், வரைபட மற்றும் கட்டிட அனுமதி உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் சங்கீதா, நகரப்பொறியாளர் சுகந்தி, நகர்நல அலுவலர் மரு.ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள், தட்சிணாமூர்த்தி, அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்) ஆ.ரெங்க ராஜன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புதாய், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...