மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா : தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் விழா
மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 36ஆவது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.
சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரான ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டி உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார். இவரின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிட கலையிலும் ராஜ ராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
ராஜராஜசோழனின் 1036 ஆவது சதய விழா வருகிற 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மஞ்சள், சந்தனம், தயிர், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
கொரோனா காரணமாக ராஜராஜசோழனின் சதய விழா ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என நிர்வாக குழு தெரிவித்துள்ளது. மங்கல இசையுடன் தொடங்கும் இவ்விழா, தேவாரப் பாடல்கள், பாடி பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதியுலா,கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம்,சிறப்பு சொற்பொழிவுகள் என ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
கொரோனாவால் கடந்த ஆண்டும் இந்தாண்டு ராஜராஜசோழனின் சதய விழாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சதயவிழா நாளில் அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார் .
இதனையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு திரவியப்பொடி, வாசனைப்பொடி, மஞ்சள்பொடி, அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர் உள்ளிட்ட 48 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு மலர்அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் வழிபாடு நடைபெறும். கருவறைக்கு வெளியே 10 ஓதுவார்கள் அமர்ந்து தேவாரம், திருவாசகத்தை பாடி தமிழில் வழிபாடு செய்வார்கள். மாலையில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பெரியகோவில் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் நடராஜர் சன்னதியில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Leave your comments here...