இருசக்கர வாகனத்தில் பயணித்தால் 9 மாத குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம் – பரிசீலித்து வரும் மத்திய அரசு
இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதற்கு தலைக்கவசம் அணியாததே பிரதான காரணமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது 9 மாதம் முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளும் தலைக்கவசம் அணிந்திருப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த புதிய வரைவு விதிகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி 4 வயதிற்கு உட்பட்ட குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அதிகபட்ச வேகத்தை 40 கிலோ மீட்டராக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
9 மாதம் முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் தலைக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வரைவு விதியில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பிரத்யேக தலைக்கவசம் அல்லது சைக்கிள் ஓட்டும்போது அணியக்கூடிய தலைக்கவசத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஓட்டுநருடன் இணைத்திருக்கும் வகையில் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வரைவு விதியில் கூறப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கான இந்த பாதுகாப்பு விதிமுறைகள் விரைவில் சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
இது குறித்து ஆட்சேபனைகளோ, கருத்துகளோ, ஆலோசனைகளோ இருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதை comments-morth@gov.in மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மற்றும் கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...