தேனி தட்சிணாமூா்த்தி கோயிலில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்பு
தேனி வேதபுரி தட்சிணாமூா்த்தி கோயிலில் கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. கடத்தில் ஈடுபட்ட இரண்டுபேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அரண்மனைப்புதுார் வயல்பட்டி ரோட்டில் வேதபுரி சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிர்வாகத்தில் இயங்கும் தட்சிணாமூர்த்தி கோயில் மூலவர் கல் மண்டபத்தில் தாயுமானவர் (ஒரு அடி), மாணிக்க வாசகர் (1.5 அடி), முக்கால் அடி உயர வேதவியாசர், ஸநகர், ஸநாதனர், ஸனந்தர், ஸாந்தக்குமாரர், அரை அடி உயர நந்திகேஸ்வரர், கால் அடி உயர பலிபீடம் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடந்தன.
அக்., 25 இரவு ஆஸ்ரமம் அருகில் உள்ள வனத்துறை நாற்றாங்கால் பண்ணை வழியாக மூலவர் தட்சிணாமூர்த்தி கோயில் கிழக்கு சுவர் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். உண்டியலுடன் ஐம்பொன் சிலைகளையும் திருடி சென்றனர்.தேனி எஸ்.பி., பிரவின்உமேஷ்டோங்ரே உத்தரவில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட பெரியகுளம் வடகரை மில்லர் ரோடு ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சிலைகளை திருடி தலைமறைவான பெரியகுளம் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
இது குறித்து எஸ்பி. பிரவின் உமேஷ் டோங்ரே கூறியதாவது: நாற்றங்கால் பண்ணையில் தனிப்படையினர் சோதனையிட்டனர். அதில் திருடர்கள் துாக்கி சென்ற உண்டியல் எடை அதிகம் என்பதால் தரையில் வைத்து, வைத்து துாக்கிச் சென்றது தெரிந்தது. அவர்கள் விட்டுச்சென்ற ‘கம்பி’ மூலம் சிலை திருட்டில் ஈடுபடுபவர்கள்தான் என்பதை உறுதி செய்தோம். மாவட்டத்தில் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் பட்டியல் எடுத்து யாரெல்லாம் வெளியில் உள்ளனர் என கண்டறிந்தோம்.
ஸ்ரீதர் ஆயுத வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் இருப்பது தெரிந்தது. வேதவியாசர் சிலையும், பலிபீடமும் அதிக எடை இருந்ததால் அதனை நாற்றாங்கால் பண்ணையில் மறைத்து வைத்தனர். மற்ற 7 சிலைகளை டூவீலரில் எடுத்துச் சென்று பெரியகுளம் அடுக்கம் ரோட்டில் உள்ள தரைப்பாலத்திற்கு கீழ் புதரில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை மீட்டோம். உண்டியலை முல்லையாற்றில் போட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
கைதான ஸ்ரீதர் மீது கொலை, சிலை திருட்டு, அடிதடி, ஆயுத கடத்தல் என 9 வழக்குகள் உள்ளன. பெரியகுளம் ஓய்வு இணை இயக்குனரின் வீட்டில் திருடி குண்டாசில் கைது செய்யப்பட்டவர், 10 நாட்களுக்கு முன் வெளியில் வந்து சிலை திருட்டில் ஈடுபட்டுள்ளார். தலைமறைவான இவரது கூட்டாளி கார்த்திக் மீதும் வழக்குகள் உள்ளன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி., உதவியால் விசாரணை நடந்தது. டூவீலர், 9 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.” என்றார். தனிப்படையினரை பாராட்டி எஸ்.பி., சான்றிதழ்கள் வழங்கினார்.
Leave your comments here...