ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : முதன் முறையாக ‘டாப் – 25’ நாடுகள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியா
இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு தயாரிப்புகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்’ உள்ளிட்ட ஒன்பது பொதுத் துறை நிறுவனங்கள் ராணுவ தளவாட தயாரிப்பை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், டில்லியில் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- மத்திய அரசு ராணுவ தளவாட தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக ராணுவ தளவாட ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள 25 நாடுகளில், முதன் முறையாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
ஸ்வீடனின் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேசஅமைதி ஆராய்ச்சி மையம்’ இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது; இது எனக்கு மகிழ்ச்சி அளித்து உள்ளது. ராணுவ தளவாடங்களில், குறிப்பாக தரைப்படை மற்றும் விமானப்படை பிரிவுகளின் ஏற்றுமதியை, 2024 – 25ம் நிதியாண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...