லக்கிம்பூரில் விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடக்கவிருந்த பா.ஜ. கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோதியதாக செய்தி பரவியது.
இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது; நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் பலியாயினர்; மேலும், பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கொந்தளிப்பாக இருப்பதால் லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
லக்கிம்பூர் நோக்கி வந்த பிரியங்கா கைது செய்யப்பட்டு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். லக்கிம்பூர் பகுதிக்குச் செல்ல அனுமதி கேட்டு ராகுல் அளித்திருந்த மனுவையும் உ.பி., மாநில அரசு நிராகரித்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் நிருபர்களை இன்று காலை சந்தித்த ராகுல் கூறியதாவது: விவசாயிகள் மீது ஜீப்பை மோதச்செய்து கொல்லப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் பெயர்கள் வெளிவருகிறது. நேற்று பிரதமர் லக்னோ சென்றார். ஆனால், லக்கிம்பூர் கெரி செல்லவில்லை. திட்டமிட்டே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விவசாயிகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனமாக உள்ளார்.
விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு அகங்காரம் காரணமாக நிராகரிக்கிறது. வன்முறைக்கு பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. விவசாயிகள் மீதான வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்படவில்லை.
லக்கிம்பூர் சென்று விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக தான் இந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தான் எதிர்க்கட்சிகளின் பணி. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்ற கட்சி தலைவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
உ.பி., அரசு விதித்த தடை தனக்கு பொருந்தாது. இன்று இரண்டு மாநில முதல்வர்களுடன் லக்கிம்பூர் சென்று, சூழ்நிலையை ஆய்வு செய்வதுடன் விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிப்போம். பிரியங்கா தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது உண்மை. ஆனால், இது விவசாயிகள் சார்ந்த பிரச்னை. இது குறித்து கேள்வி கேட்க வேண்டியது மீடியாக்களின் கடமை.
ஆனால், நாங்கள் கேள்வி எழுப்பும் போது, அரசியல் செய்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளை அரசு கட்டுப்படுத்துகிறது. உ.பி.,யில் அபாயகரமான அரசியல் நடந்து வருகிறது. அங்கு ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரம் நடக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...