போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை வரும் அக்டோபர் 7ஆம் தேதி வரை போலீஸ் காவல்.!
இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து அக்.2ம் தேதி மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர்.
கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். இதையடுத்து, அந்த கப்பல் முழுவதும் சுமார் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், நிகழ்வில் கலந்துகொண்ட சிலரிடமிருந்து உயர்ரக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, அதன் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டு மருத்துவச் சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை இன்று மும்பை எஸ்பிளனேடு மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், போதைப் பொருளை வாங்கியவர்களிடம் முறையாக விசாரணை நடத்தினால் தான் அதனை விற்பவர்களைப் பற்றிய விவரங்களை அறிய முடியும் என்று வாதிக்கப்பட்டது.
மேலும், இந்த விசாரணை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், விசாரணை முகமை என இருவருக்குமே நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுக்களை நிராகரித்து, அக்டோபர் 7ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க என்சிபிக்கு மும்பை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
Leave your comments here...