ஈஷா : காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 106 கிராம பஞ்சாயத்துக்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்
மஹாத்மா காந்தியின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 700 ஏக்கரில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், #காந்திஜெயந்தி அன்று, #காவேரிகூக்குரல் தமிழகத்தின் 106 கிராம பஞ்சாயத்துகளில் 2,04,304 மரக்கன்று நட விவசாயிகளுக்கு உதவி, லாபமான மரப்பயிர் விவசாயத்திற்கு வழிவகுத்துள்ளது. இதை துரிதப்படுத்துவது, வருங்காலத்தில் நம் மண், விவசாயி, தேசத்தின் உணவு பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
On #GandhiJayanti, #CauveryCalling supported farmers in 106 Gram Panchayats in Tamil Nadu to plant 204,304 saplings, enabling them towards profitable tree-based agriculture. Absolutely essential to accelerate this for the future of our soil, farmers & nation's food security. -Sg https://t.co/E6kNSYYyls
— Sadhguru (@SadhguruJV) October 2, 2021
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால் தான் தேசம் முன்னேற்றம் அடையும். கிராமங்களுக்கு சுதந்திரம் வந்தால் தான் தேசமும் சுதந்திரமாக இயங்கும் என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்.
நம் நாட்டில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தில் இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு மண்ணும் நீரும் மிக அடிப்படையான தேவையாக உள்ளது. மண் வளம் குன்றுவதும் அதனால் நீர் பற்றாகுறை ஏற்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதை சரிசெய்யும் நோக்கத்தில் காவேரி வடிநிலை பகுதியில் உள்ள விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றும் பணிகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு காந்தி ஜெயந்தி அன்று 2 லட்சம் மரக்கன்றுகளை நம் தமிழக விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர்.
இந்தப் பணி தொடர்ந்து சிறப்பாக நடப்பதற்கு அரசாங்கம், ஊடகத் துறையினர், தமிழ் மக்களின் உதவி மிகவும் தேவையாக உள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்தை உங்கள் இயக்கமாக கருதி அனைவரும் உங்கள் முடிந்த வகைகளில் இதில் ஈடுப்பட வேண்டும். நம்முடைய தலைமுறையிலேயே இழந்த தமிழ் மண்ணின் வளத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த இந்த மரம் நடும் நிகழ்வின் கீழ் கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, கரூர், நாமக்கல், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 106 கிராம பஞ்சாயத்துக்களில் 2 லட்சம் டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் மண் மற்று தண்ணீரின் தன்மைகேற்ப தேக்கு, சந்தானம், மகோகனி, கருமருது, செம்மரம், மலைவேம்பு உள்ளிட்ட பண மதிப்புமிக்க மரங்களை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாயிகளுக்கு பரிந்துரைத்து வருகின்றனர். இதற்காக, அவர்கள் தமிழ்நாடு முழுவதும் கிராம் கிராமமாக சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி, மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி வருகின்றனர். இந்த முயற்சியின் மூலம் சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதார வளமும் மேம்படும்.
இதேபோல், கடந்தாண்டு காந்தி ஜெயந்தியின் போது 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...