அன்றே கணித்த சூர்யா..! போதைப்பொருள் விற்பனை – சிங்கம் படத்தில் நடித்த நைஜீரிய நடிகரை கைது செய்த பெங்களுர் போலீஸ்..!
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட், பி.டி.ஏ. காம்பிளக்ஸ் பின்புறம் போதைப்பொருட்களை விற்பனை செய்ய வெளிநாட்டு வாலிபர் முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றிய நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபரிடம் சோதனை நடத்திய போது போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், அவர் நைஜீரியாவை சேர்ந்த செக்வூயும் மால்வின் (வயது 45) என்று தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அதாவது கைதான மால்வின் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட அவர், இதற்காக நைஜீரியாவில் 6 மாதம் சினிமாவில் நடிக்க பயிற்சி பெற்றிருந்தார். பின்னர் நைஜீரியாவில் 3 படங்களில் மால்வின் நடித்திருந்தார். மருத்துவம் தொடர்பான விசாவில் இந்தியாவுக்கு வந்த அவர், மும்பையில் தங்கி இருந்து 2 மாத காலம் சினிமாவில் நடிப்பதற்கான பயிற்சி பெற்றிருந்தார்.
அதன்பிறகு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தியில் பல்வேறு படங்களில் அவர் நடித்திருந்தார். குறிப்பாக தமிழில் வெளியான நடிகர் சூர்யா நடித்திருந்த சிங்கம்-2 படத்திலும், கன்னடத்தில் வெளியாகி இருந்த அண்ணாபாண்ட் என்ற படத்திலும் மால்வின் நடித்திருந்தார். ஒட்டு மொத்தமாக 4 மொழி படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் மால்வின் நடித்திருந்ததும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் எளிதில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர் போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். குறைந்த விலைக்கு போதைப்பொருட்களை வாங்கி பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று மால்வின் பணம் சம்பாதித்திருந்தார்.
அவரிடம் இருந்து 15 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 250 மில்லி ஆசிஸ் ஆயில், ரூ.2,500 மற்றும் விலை உயர்ந்த ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கைதான மால்வின் மீது கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave your comments here...