கோவை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் : கைதான விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல்..!
கோவையில், இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில், பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சக அதிகாரிக்கு, வரும் 30-ம்தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10-ம் தேதி, சக ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக, பெண் அதிகாரி ஒருவர், காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டு, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இந்த வழக்கில் விமானப்படை அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டுள்ள விமானப்படை அதிகாரி, லெப்டினல் அமிர்தேஷை, தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறை கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, மாநில காவல்துறையே இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், லெப்டினல் அமிர்தேஷூக்கு, வரும் 30-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
Leave your comments here...