நோய்கள் தீர்க்கும், சித்தர்கள் வாசம் செய்யும் தென் திருவண்ணாமலை.!
மதுரை:ராமபிரான் ராவண வதம் முடித்து, அயோத்தி திரும்பியதும், அசுவமேத யாகம் செய்தார். அசுவமேத யாகத்துக்கு முன், குதிரையொன்றை கொடியுடன் நாடுமுழுவதும் அனுப்புவர். அவ்வாறு சென்ற குதிரை எங்கெல்லாம் தங்கி நின்று ஓய்வெடுத்ததோ அங்கெல்லாம் ஶ்ரீராமன் பிற்காலத்தில் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்துவழிபாடு செய்தார்.
அவ்வாறு ராமனின் அசுவமேத யாகக்குதிரை தங்கி இளைப்பாறிய இடம் திடியன்மலை. அவ்வாறு, திடியன்மலை பொற்றாமரைக் குளத்தின் கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமன் எழுப்பிய கோயிலே கயிலாசநாதர் திருக்கோயில். `தென் திருவண்ணாமலை’ எனப் போற்றப்படும் இந்தத் திருத்தலத்தில் கிரிவலம் செய்வது திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய இணையானது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது திடியன் கிராமம். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில். தடித்த வார்த்தைகளைப் பேசி சாபம் பெற்ற சில முரடர்கள், தங்களின் சாபம் தீர இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் இருந்த கூழாங்கற்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மலையை வலம் வந்து சாபம் தீர்ந்தனர். தடியர்கள் சாபம் தீர்ந்த தலம் ஆதலால் அது ‘திடியன் மலை’ என்று பெயர் பெற்றது என்கிறது தல வரலாறு.
மூலவர் கயிலாசநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார். அம்மாள் பெரியநாயகி கோயில் தெற்கு நோக்கி அருள்கிறாள். மூலவர் சந்நிதிக்கு வெளியே வலது புறம் விநாயகரும் இடதுபுறம் முருகனும் அருள்கின்றனர். சுவாமிக்கு எதிரே நந்திதேவர் காட்சிகொடுக்கிறார்.
இங்கு அமைந்திருக்கும் ‘பிரதோஷ நந்தி’ பெரிய திருமேனியோடு கொடிமரத்தின் அருகே இருக்கும் மண்டபத்தில் விளங்குகிறது. பால தண்டாயுதபாணி, முக்குருணி விநாயகர், கன்னிமூல கணபதி, லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடனும் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்கை, நவகிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பிராகார தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர்.
இந்தத் தலம் பல புராணச் சிறப்புகளை உடையது. காயத்ரி மந்திரத்துக்கு மூல வடிவம் கொடுத்த ஞானகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் தலங்களில் முக்கியமான தலமாக இத்தலம் திகழ்கிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்களுடன் காட்சிகொடுப்பார்.
ஆனால், இந்தத் தலத்தில் 14 சித்தர்களுடன் நந்திவாகனத்தில் வீராசனத்துடன் (யோகம்) தரிசனம் கொடுக்கிறார். தட்சிணாமூர்த்தி லோக குருவாக அமர்ந்து சித்தர்களுக்கு உபதேசிக்கும் தலமாதலால் இது குருபரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. அகத்திய முனிவர் வடக்கே கயிலாசத்தில் இருந்து தென்னகத்துக்கு வந்தபோது ,இந்தத் திருக்கோயிலில் தங்கி கயிலாசநாதரை வழிபட்ட பிறகு தன் யாத்திரையைத் தொடர்ந்தார்.
முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொள்ளும் முன்பாக இந்தத் தல இறைவனை வணங்கி வழிபட்டாராம். பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன், வான சாஸ்திரக் கலையை இங்கு வந்து கற்றதாகச் சொல்லப்படுகிறது.
பாண்டிய மன்னர்கள் பலர் இந்தக் கோயிலில் திருப்பணி செய்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருமலை நாயக்க மன்னர் காலத்தில் இங்குள்ள தாமரைக்குளம் பராமரிக்கப்பட்டுத் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டது.
இங்குள்ள துர்கை அம்மன் எட்டுக்கரங்களுடன் சங்குச் சக்கரங்கள் ஏந்தி, மகிஷன்மீது கால் பதித்து நின்றருளுகிறாள். இந்தச் சந்நிதியில் ஏழு வாரங்கள் வெள்ளி, செவ்வாய் ஆகிய தினங்களில் நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 14 வாரங்கள் விளக்கு ஏற்றி வழிபட தோஷங்கள் விலகித் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திடியன் மலையின் தலவிருட்சம் நெய்க்கொட்டான் மரம். கிரிவலம் சென்றுவந்து இந்த மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் சிந்தனையில் தெளிவு பிறக்கும். உடல் மற்றும் மனம் சம்பந்தமான நோய்கள் தீரும் என்று நம்பப்படுகிறது. கயிலாசநாதரை மனமுருக வேண்டிக்கொள்ள, குழந்தைகளுக்கு உண்டாகும் குரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுபகாரியங்கள் நடக்கப் பிரார்த்திப்பவர்கள் சுவாமிக்கு வில்வ இலை சாத்தி வழிபட்டால் விரைவில் கைகூடும்.
இந்த மலையில் சித்தர்கள் வாழ்வதாக நம்புகிறார்கள் ஊர்மக்கள். மேலும், இந்த மலையின்மீது ராமனின் அருள் வாசம் செய்வதாகவும், தங்களுக்குப் பிரச்னை ஏற்படும்போது, மலையை நோக்கி, ‘ராமா… நீயே பார்த்துக்கோ’ என்று சொல்வது வழக்கம் என்றும் சொல்கின்றனர் கிராம மக்கள்.
செய்தி : ரவிசந்திரன்
Leave your comments here...