ரூ.15 கோடியில் தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை – அக்டோபர் 17ல் அடிக்கல் நாட்டு விழா..!
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, அக்டோபர் 17ல் நடக்கிறது’ என, ஹிந்து எழுச்சி பேரவை தெரிவித்து உள்ளது.
திருச்சியில் ஹிந்து எழுச்சி பேரவை மாநில தலைவர் சந்தோஷ் குமார் நேற்று கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் திருமேனி அமைப்புக்குழு சார்பில், ராஜராஜ சோழனுக்கு, 150 அடியில் பிரமாண்ட சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது.
சிலை அமையும் இடத்தில், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக, கலாசார பூங்காக்கள், அருங்காட்சியகம் போன்றவை ஏற்படுத்தப்படும்.அடிக்கல் நாட்டு விழாவில், ஆதீனங்கள், மடாதிபதிகள், பல மதங்களை சார்ந்த குருமார்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
உலகம் முழுதும் ராஜராஜ சோழனின் புகழை பறைசாற்றும் வகையில் இந்த சிலை அமையும். 12 முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்பட உள்ளது. பொது மக்களிடம் நிதி திரட்ட, தமிழகம் முழுதும் ரத யாத்திரை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...