உலக நன்மைக்கான சக்தியாக குவாட் கூட்டமைப்பு இயங்கும் – பிரதமர் மோடி
குவாட் அமைப்பு உலக நன்மைக்கான சக்தியாக செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பயன்பெறும் விதமாக, இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் குவாட் அமைப்பு நாடுகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்றிரவு 11.30 மணியளவில் குவாட் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷி கிடே சுகா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள், கொரோனாவை எதிர்கொள்வது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Speaking at the Quad leaders meeting. https://t.co/bQzenzUlQa
— Narendra Modi (@narendramodi) September 24, 2021
இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட முன்வந்துள்ளதாகவும், தடுப்பூசி தயாரிப்பின் மூலம் குவாட் நாடுகள் பயன்பெறும் எனவும் கூறினார். உலக நன்மைக்கான சக்தியாக இந்த மாநாடு மாறும் என குறிப்பிட்ட அவர், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் . சர்வதேச பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்துக்கான எதிரான வழிமுறைகள் குறித்து ஆலோசித்ததில் மகிழ்ச்சி எனவும் கூறினார்.
பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குவாட் ஃபெல்லோஷிப் (fellowship) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக கூறினார். இத்திட்டத்தின் மூலம் குவாட் அமைப்புகளில் இடம்பெற்றுள்ள 4 நாடுகளை சேர்ந்த தலா 25 மாணவர்கள், அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழங்களில் உயர் கல்வி படிக்க வழிவகை செய்யப்படும் என்றார். ஆண்டுக்கு 4 நாடுகளில் இருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். நேர்மறை கொள்கைகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ஜப்பான் பிரதமர் யோஷி கிடே, ஜப்பான் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியதற்கு நன்றி தெரிவித்தார். இந்தோ-பசிபிக் பகுதியில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் சென்று வர நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.
இதையடுத்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வோம் என தெரிவித்தார். கூட்டத்தில் நான்கு நாடுகளுமே சீனாவை நேரடியாக குறிப்பிடாமல், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ ஒன்றிணைவதாக தீர்மானித்தனர்.
Leave your comments here...