தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய பாதுகாப்பு அகாடமிக்கான நுழைவுத்தேர்வில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக வக்கீல் குஷ் கல்ரா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் ஏற்படுத்தப்படும்.
பெண்கள் எழுதும் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை விரைந்து உருவாக்க ஆய்வுக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நவம்பரில் நடைபெறும் தேர்வுக்குப் பதிலாக, அடுத்தாண்டு மே மாதத்தில் நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்துக்கு தீர்வுகாண மத்திய அரசால் முடியும். அடுத்த ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்கும் திட்டம் தொடரட்டும். இந்த தேர்வை எழுத திட்டமிட்டுள்ள பெண் தேர்வர்களின் நாட்டத்தை கருத்தில்கொண்டு, நடப்பாண்டு நவம்பரில் நடைபெறும் தேர்வுக்குப் பதிலாக அடுத்தாண்டு மே மாதத்தில் நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
பாதுகாப்பு படைகளின் பயிற்சியின் அங்கமாக இக்கட்டான சூழலை எதிர்கொள்வது உள்ளது. அதுபோல, இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்வார்கள். எனவே, தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை எழுத அனுமதித்த சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவை நீக்க விரும்பவில்லை. நவம்பரில் நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும். இத்தேர்வை எழுத திட்டமிட்டுள்ள பெண் தேர்வர்களின் நாட்டத்தைச் சிதைக்க விரும்பவில்லை’ என உத்தரவிட்டனர்.
Leave your comments here...