தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடல் – அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் தற்போது துவங்கியுள்ள நடப்பு கல்வியாண்டில் தன்னிச்சையாக செயல்பட்டு வந்த சுமார் 20 பொறியியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை எதுவும் நடத்தப்படாததால், அவை மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொறியியல் படிப்பினை நடத்தும் சுயநிதி கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.
2021 -22ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறுவதற்கு செப்டம்பர் 3ம் தேதி வரை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அனுமதி வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகமும் செப்டம்பர் 3ம் தேதி வரை பி.இ., பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளது.
பொறியியல் படிப்பில் வேலையின்மை காரணமாக ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்கள் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்துவதில் பெரும் சிரமத்தை அனுபவித்து வருவதாக அதன் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருந்த கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க விரும்பவில்லை எனவும் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன. மேலும் சில கல்லூரிகள் மாணவர்களை நடப்பாண்டில் சேர்ப்பதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. ஒரு காலத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வந்த நிலை மாறி சமீப ஆண்டுகளாக கல்லூரிகள் மூடப்படுவது அதிகரித்து வருகிறது.
2021 -22 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 460 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில் 20 கல்லூரிகள் விடப்படுவதால் இந்த ஆண்டு 440 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
Leave your comments here...