அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைரம் பறிமுதல்…
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் புரிந்த அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தேர்தல் பிரசாரத்தின் போதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை போட்டு நடவடிக்கை எடுத்தனர்.
அதன்பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, கோவை, சென்னை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 3-வதாக சிக்கி இருப்பவர் அ.தி.மு.க. முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி.
இவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். ரூ.28.78 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக 6 மடங்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று அதிகாலை முதல் கே.சி.வீரமணி தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் இந்த சோதனை வேட்டை நடத்தினார்கள்.
நேற்று காலை முதல் கே.சி.வீரமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் பல்வேறு இடங்களில் நடந்த சோதனை நிறைவடைந்தது. ”இந்த சோதனையில் ரூ.34,01,060 ரொக்க பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அன்னிய செலவாணி டாலர், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம்(623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்குக்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.
மேலும். கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல்(தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான) குவித்து வைக்கப்பட்டு இருந்தது என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. முன்னதாக இந்த சோதனை தொடர்பாக கண்டனம் தெரிவித்த அதிமுகவின் ஓ.பி.எஸ் ஆகியோர் ”தி.மு.க அரசு வேண்டுமென்றே அ.தி.மு.க.வினரை பழிவாங்க நினைக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் வெற்றி பெறுவதற்காக சோதனை என்னும் பெயரில் நாடமாடுகின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ‘தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன் முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை. தி.மு.க அரசு போடும் எந்தவிதமான வழக்குகளையும் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் மூலம் அனைத்து வழக்குக்ளையும் சந்திப்பேன்’ என்று கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
Leave your comments here...