கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ராமரின் பொறியியல் தொழில்நுட்பங்கள்..! எந்த மாநிலத்தில் தெரியுமா…?
மகாபாரதம், ராமசரித்திரம், யோகா, தியானம் பற்றிய பாடத்திட்டங்கள் புதிய கல்விக்கொள்கையின்படி இந்தாண்டு புதிதாக சேர்க்கப்படும் என மத்தியப்பிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்தக் கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் செயல்படத்தொடங்கும் என அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, மகாபாரதம், ராமசரித்திரம், யோகா, தியானம் பற்றிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் “ராமசரித்மனாஸ் பிரயோகித்த தத்துவம்” எனும் பாடம், விருப்ப பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ராமசரித்மனாஸில், நான்கு வேதங்கள், புராணங்கள், இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் ஆன்மீகம் மற்றும் மதம் போன்ற தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.முக்கியமாக, ராமர் சேது பாலத்தை எடுத்துக்காட்டாக கொண்டு, “ராமரின் பொறியியல் நுட்பங்கள்” எனும் பாடப்பிரிவும் இடம்பெற்றுள்ளது.
இதுபோக, கடவுள் ராமர் அவரது தந்தைக்கு கீழ் படிந்து நடந்தது, தீவிர பக்தியோடு செயல்பட்டதை குறிக்கும் பாடங்களும் உள்ளன. மனித வாழ்க்கையின் மதிப்பு மற்றும் மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்கே இந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் புராணங்கள் தொடர்பாக பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுவது இது முதல் முறைல்ல. கடந்த 2011-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை தொடர்பான பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கிளம்பிய எதிர்ப்பால் அந்த திட்டம் திரும்பப்பெறப்பட்டது. அதேபோல் தற்போது புதிய கல்விக்கொள்கை திட்டம் 2020-ஆம் ஆண்டின் படி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த பாடத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
Leave your comments here...