தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 380 வழக்குகள்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை
நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 51 பேர் மீது அமலாக்கத்துறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை 71 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. இதில் 48 வழக்குகளில் இதுவரை விசாரணை கூட தொடங்கப்படவில்லை.
சிபிஐ-யில் 121 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 14 இந்நாள் எம்.பி.க்கள், 37 முன்னாள் எம்.பி.க்கள் என 51 எம்.பி.க்கள் உள்ளனர்.
சிபிஐ வழக்குகளில் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்களில் 34 பேர் தற்போது பதவியில் உள்ளவர்களாவர். 78 பேர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 9 பேர் எந்த விசாரணையும் நடத்தப்படாமலே இறந்து போய்விட்டனர்.
சிபிஐ வசம் உள்ள வழக்குகளில் பலவற்றுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முகாந்திரம் உள்ளதாக கூறப்படுகிறது. பல வழக்குகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, தமிழகத்தில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான 380 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், நிதி மோசடி, கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் அடங்கும். இவற்றில் பெரும்பாலான வழக்குகள் உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் தடையால் விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...