அயோத்தி தீர்ப்பு : அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்..!
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், அயோத்தி தீர்ப்புக் குறித்து, அனைத்து மத தலைவர்களுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாபா ராம்தேவ், சுவாமி பரமாத்மானந்த், ஷியா பிரிவு மதகுரு மெளலானா கல்பே ஜாவத், உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை நடத்திய பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், ஒருங்கிணைந்து உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் போது, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்து, முஸ்லிம் தலைவர்கள் உறுதி அளித்தனர். குறிப்பாக, தற்போதைய சூழலை பயன்படுத்தி சில தேசவிரோத சக்திகள் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் நாட்டு நலனை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்று அச்சம் வெளியிட்ட அவர்கள், இந்த நடவடிக்கைகளுக்கு யாரும் இடம் கொடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சார்பாக பின்னர் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது:- அதில், “இந்த தீர்ப்பை எந்த தரப்புக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. நாட்டின் நலனுக்கான தீர்ப்பாகவே கருத வேண்டும். இதை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் தொடர வேண்டும் என தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தியதாகவும், உயர்மட்ட மத தலைவர்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு இந்த சந்திப்பு உதவியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
Leave your comments here...