நாட்டின் 75-வது சுதந்திர தினம் : தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல்துறை ஆய்வாளர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு விருது.!
சுகந்திரத் தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்க உள்ளது.
2021-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 152 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 152 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இடம் பெற்றவர்கள் யார் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள் எம்.சரவணன், ஏ.அன்பரசி, பி.கவிதா, ஆர் ஜெயவேல், கே.கலைச்செல்வி, ஜி.மணிவண்ணன், பி.ஆர்.சிதம்பரமுருகேசன் மற்றும் சி. கண்மணி ஆகிய 8 பேர் விருது பெறுகிறார்கள்.
குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கவும், புலனாய்வில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவும், 2018-ஆம் ஆண்டில் “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்” நிறுவப்பட்டது.
மத்தியப் புலனாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த 15 அலுவலர்களுக்கும், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா 11 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், கேரளா மற்றும் ராஜஸ்தானிலிருந்து தலா 9 பேருக்கும், பிகார் காவல் துறையைச் சேர்ந்த 7 பேருக்கும், குஜராத், கர்நாடகா மற்றும் தில்லி காவல்துறையில் பணிபுரியும் தலா 6 பேருக்கும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் உட்பட, 28 பேர் மகளிர் காவல் துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...