370-வது சட்டப்பிரிவு நீக்கம் : காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் இருவர் நிலம் வாங்கியுள்ளனர் – மத்திய அரசு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், வெறும் 2 வெளியாட்கள் மட்டுமே காஷ்மீரில் நிலம் வாங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிக ஏற்பாடாக சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் சட்டப் பிரிவு 370 மற்றும் 35-ஏ மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் மூலம் பல்வேறு சலுகைகள் இருந்தன. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பான மத்திய அரசின் சட்டங்கள், காஷ்மீர் மாநில ஒப்புதலின்றி நிறைவேறினால், அச்சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
மேலும் வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அதே போல் காஷ்மீர் பெண், வெளிமாநில ஆணை திருமணம் செய்தால் அவரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது.
கடந்த ஆகஸ்ட் 5, 2019-ல் மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக ரத்து செய்தது. சட்டமன்றத்தை கலைத்துவிட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதற்கு இன்னமும் காஷ்மீரில் எதிர்ப்பு நிலவுகின்றது.
இந்நிலையில் “சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு எத்தனை பேர் காஷ்மீரில் நிலம் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் நிலம் வாங்குவதில் தடைகளை எதிர்கொண்டார்களா” என்று பார்லிமென்டில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீர் அரசு அளித்த தகவலின் படி, ஆகஸ்ட் 2019 முதல் காஷ்மீருக்கு வெளியில் இருந்து இரண்டு நபர்கள் யூனியன் பிரதேசத்தில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். காஷ்மீரில் சொத்துக்கள் வாங்குவதில் தடைகளை எதிர்கொண்டதாக எந்தவொரு அறிக்கையும் அரசிடம் பதிவாகவில்லை. என தெரிவித்தார்.
Leave your comments here...