இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான “விக்ராந்த்” சோதனை ஓட்டம் தொடங்கியது ..!
இந்திய கடற்படைக்காக இப்போர் கப்பல், கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 25.6 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர் கப்பல் என்ற சிறப்பம்சம் பெற்றுள்ளது. கப்பலின் வடிவமைப்பு பணிகள் 1999-ல் தொடங்கியது.
2009-ல் கப்பலின் அடித்தளம் அமைக்கப்பட்டது. படிப்படியாக பணிகள் நிறைவடைந்து 2020 டிசம்பரில் அடிப்படை சோதனைகள் முடிவடைந்தன. இந்நிலையில் இன்று (ஆக., 04) தனது முதல் சோதனை ஓட்டத்தை அரபிக் கடலில் விக்ராந்த் துவங்கியது. பிரம்மாண்ட கப்பலின் சோதனைப் பயணம் நான்கு நாட்கள் நடைபெறும்.
இது குறித்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள கடற்படை செய்தித்தொடர்பாளர், “இதன் முன்னோடி விக்ராந்த், 1971 போர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய 50-ம் ஆண்டில், அதன் மறுபிறப்பான இன்றைய விக்ராந்த் தனது முதல் சோதனை கடல் பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறது. இந்தியாவிற்கு பெருமை மிகுந்த மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நாள். இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான போர்க்கப்பல்.” என குறிப்பிட்டுள்ளார்.
Proud & historic day for India as the reincarnated #Vikrant sails for her maiden sea trials today, in the 50th year of her illustrious predecessor’s key role in victory in the #1971war
Largest & most complex warship ever to be designed & built in India.
Many more will follow… pic.twitter.com/6cYGtAUhBK— SpokespersonNavy (@indiannavy) August 4, 2021
40 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த மிதக்கும் கடற்படை தளம், 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் 30 தாக்குதல் ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வைத்திருக்க முடியும். அந்தவகையில் மிக்-29கே ரக தாக்குதல் ரக விமானங்கள் மற்றும் கே.ஏ.31 ரக ஹெலிகாப்டர்களையும் இந்த கப்பல் கொண்டிருக்கும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலின் கடல் சோதனை ஓட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்தின் முதல் கடல் பயணம், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு இந்தியா திட்டம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் உண்மையான சாட்சி. கோவிட்டை கூட பொருட்படுத்தாத அனைத்து பங்குதாரர்களின் உண்மையான ஈடுபாட்டை இவ்வரலாற்று சிறப்புமிக்க சாதனை காட்டுகிறது. இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்.” என கூறியுள்ளார்.
Leave your comments here...