வைரசுக்கு எதிரான மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் முகக்கவசம் – மத்திய சுகாதார அமைச்சர்
மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று முகக் கவசங்களை வழங்கினார்.
இது ஒரு சம்பிரதாயமான நிகழ்வு என்கிற போதிலும், பல்வேறு தொழிற்சாலைகள், பெருநிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோர் மற்றும் பதவியில் உள்ள அரசியல் தலைவர்கள் இதை ஒரு சங்கிலியாக மாற்றி, சரியான கொவிட் நடத்தைமுறையின் மூலம் கொவிட்-19 இடம் இருந்து அனைவரையும் பாதுகாக்க முன்வரவேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறினார்.
முன்கள பணியாளர்களிடம் தொடங்கி சுகாதார அமைச்சகத்தில் உள்ள அனைவருக்கும் முகக் கவசம் வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இன்றைய நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “இரண்டாம் அலையிடம் இருந்து படிப்படியாக மீண்டு தளர்வுகளை நோக்கி இந்தியாவின் பல பகுதிகள் முன்னேறி வரும் நிலையில், நாம் அஜாக்கிரதையாக இருந்து மறுபடியும் தொற்று பரவ காரணமாகி விட கூடாது,” என்றார்.
வைரசுக்கு எதிரான எளிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் முகக் கவசம் என்று கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோர், சமூக அமைப்புகள், அமைச்சகங்களில் உள்ள அவரது சகாக்கள் மற்றும் பதவியில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது பணியாளர்கள் கொவிட்டிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் கொவிட்-19-க்கு எதிரான போர் வலிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கி உள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க தற்போது தயாராகி வருவதாகவும் கூறினார்.ஒவ்வொரு இந்தியரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொவிட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்
Leave your comments here...