மண்டைக்காடு பகவதி அம்மன் குறித்து அவதூறு பேச்சு : பாலபிரஜாபதி அடிகளாருக்கு அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம்..!
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட சாமிதோப்பு அய்யா வைகுண்ட பதி பாலபிரஜாபதி அடிகளார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் மனம் புண்படும்படி பேசி வருகின்ற பாலபிரஜாபதி அடிகளாருக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் நாடு முழுவதும் பிரசித்திபெற்ற திருக்கோயில் தமிழகம் மற்றும் கேரளத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பகவதி அம்மனை வழிபட்டு அருள் பெற்று வருகின்றார்கள் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் அளவிற்கு புகழ்பெற்ற திருக்கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் ஆகும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் அருளின் காரணமாகத்தான் தமிழகத்தில் மாபெரும் ஹிந்து எழுச்சியும், இந்துசமய ஒற்றுமையும் இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்பட்டது என்பது கண்கூடாக தெரிந்திருக்கின்ற உண்மை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருகிவரும் மத மாற்றத்தைத் தடுத்து சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து மாபெரும் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஐயா வைகுண்டசாமி சாட்சாத் இறைவனின் அவதாரம் ஆவார். அய்யா வழி அன்புக்கொடி மக்கள் ஹிந்து ஒற்றுமைக்கு வழி வகுப்பார்கள்.
அய்யா வழியை தனி மதம் என்றும் இந்து சமயத்திற்கும் அய்யா வழிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பிதற்றி வரும் பாலபிரஜாபதி அடிகளார் சாதி மதவாத சக்திகளோடு கூட்டு சேர்ந்துகொண்டு அய்யா வழியில் இருந்து விலகி அரசியல் உள்நோக்கத்தோடு சுயநலத்தோடு செயல்பட்டு வருகின்றார்.
இப்படிப்பட்ட பாலபிரஜாபதி அவர்கள் ஹிந்து ஒற்றுமைக்கு வித்திட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் குறித்து தவறாக சித்தரிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பகவதி அம்மன் கோயில் தீ விபத்தில் பக்தர்கள் பெரிதளவு மனம் வருந்தி வேதனை அடைந்து இருக்கின்றார்கள். கோயிலை புனரமைக்கும் பேரார்வத்துடன் இருக்கும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பாலபிரஜாபதி கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துக்கள் கண்டனத்துக்குரியது.
பாலபிரஜாபதி மீது பக்தர்களின் மனம் புண்படும்படி பேசியதற்காகவும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் குறித்து அவதூறு கற்பிக்கும் வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருடைய கவனத்திற்கும், இந்து அறநிலையத்துறை அமைச்சருடைய கவனத்திற்கும் கோரிக்கை புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Leave your comments here...